தினசரி செய்திகள்

Monday, August 19, 2013

ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது seeman request to eelam tamilians not return to srilanka

அகதிகளாக வெளியேறும் ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: சீமான் வற்புறுத்தல் seeman request to eelam tamilians not return to srilanka 

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பி அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. அவ்வாறு அனுப்பி வைத்த பல அகதிகள் இன்று வரை அங்கு வாழ இடமின்றியும், வழியின்றியும் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏனெனில் அவர்கள் வாழ்ந்த இடங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், வாழ இடமின்றி காடுகளில் தமிழர்கள் சிங்கள அரசால் குடியமர்த்தப்படுகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் போராளிகள் என்ற ஐயத்தின் பேரிலும், இலங்கைக்கு மண்ணெண்ணெய், ரத்தம் கடத்தினார்கள் என்ற குற்றச்சாற்றுகளின் பேரிலும் செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கும் க்யூ பிரிவு காவல் துறை, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றி மீண்டும் இலங்கைக்கே அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
ஒரு நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக சொந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது என்று ஐ.நா.வின் அகதிகள் காப்பு பிரகடனம் கூறுகிறது.
உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்த பிரகடனத்தை இந்திய அரசு இதுநாள் வரை ஏற்றுக்கொள்ளாதிருக்கும் காரணத்தினால், ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைத்தால் அவர்கள் கொல்லப்படுவது நிச்சயம்.
இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரின் முடிவில் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளின் நிலை என்ன ஆனது என்று இன்று வரை தெரியாத நிலையில், இங்கு கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்புவது, அவர்களை மீண்டும் கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பான தாகும்.
எனவே இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அகதிகளாய் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியதோடு இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, பல தீர்மானங்களை தானே முன்மொழிந்து நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர், இங்குள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கேயே வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts