congress new plan to won gnadesigan
சென்னை, டிச. 10–
மூதறிஞர் ராஜாஜியின் 135–வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது.
மாநில தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரசார் ராஜாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஞானதேசிகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் ஞானதேசிகன் கூறியதாவது:–
12 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்கிறது.
அடுத்த மாதம் முதல் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான புதிய வியூகங்கள் வகுக்கப்படும். குறிப்பாக வட்டாரம், நகரங்களில் காலியாக உள்ள நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.
புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி பற்றி கண்டறிய இருக்கிறோம்.
வடமாநில தேர்தல் முடிவால் காங்கிரசுக்கு பின்னடவு இல்லை. இந்த 4 மாநிலத்தில் மட்டும்தான் பாரதீய ஜனதாவுக்கு மூச்சுகாற்று உள்ளது. இந்த வெற்றி என்பது மாநில பிரச்சினைகளை உள்ளடக்கியது.
இவை பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக கருத முடியாது.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தி.மு.க. சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை நான் கட்சி மேலிடத்துக்கு அனுப்பிவிட்டேன். இந்த பிரச்சினையால் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். எங்களை பொருத்தவரை எந்த கட்சியுடனும் இடைவெளி வைக்கமாட்டோம்.
பாரதீய ஜனதாவில் வெற்றி பெற்றவர்களை சோனியாகாந்தி வாழ்த்தியுள்ளார். அதேபோல் சோனியா பிறந்த நாளுக்கு நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பொருளாளர் கோவை தங்கம், விடியல் சேகர், சைதை ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...