Need red light area in chennai
சென்னையிலும் ரெட் லைட் ஏரியா வேண்டும்! பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை!
மும்பையில் இருப்பது போலவே சென்னையிலும் விபச்சாரத் தொழிலாளர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு செக்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வருக்கு அவர்கள் கடிதமும் எழுதியுள்ளனர்.
போலீஸ் தொல்லை அதிகரிப்பதாலும், பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுகளைத் தடுக்க சிவப்பு விளக்குப் பகுதி உதவும் என்பதாலும், தங்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து தப்புவதற்கு வசதியாகவும், மும்பையைப் போல சென்னையிலும் விபச்சாரத்திற்காக பிரத்யேகமாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதுகுறித்து இந்திரா மகளிர் கூட்டுறவு அமைப்பு என்ற பெயரிலான செக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கலைவாணி கூறுகையில், சென்னையில் மட்டும் 3000 செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்தியாவின் பெருநகரங்களில் சென்னை, பெங்களூரில் மட்டும்தான் தனியாக சிவப்பு விளக்குப் பகுதி இல்லை.
இதன் காரணமாக சென்னையில் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பெண்கள் போலீஸ் தொல்லை, வன்முறைக் கூட்டங்களிடம் சிக்கிக் கொள்வது, மோசடிக்குள்ளாவது என அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் விபச்சாரம் சட்டத்துக்குட்பட்டதுதான். இருப்பினும் பொது இடங்களில் நின்று கொண்டு ஆண்களை அழைப்பது, விபச்சார விடுதி நடத்துவது, புரோக்கர்களை வைத்துக் கொண்டு ஆட்களைப் பிடிப்பது ஆகியவை குற்றச் செயல்களாக பார்க்கப்படுகின்றன.
விபச்சாரப் பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அமைதியான முறையில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் காத்திருந்தால் கூட கைது செய்கிறார்கள்.
எனவே இதுபோன்ற சிக்கல்களை விளக்கி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அதில், மும்பையில் உள்ளது போல சென்னையிலும் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், பாதுகாப்பான முறையில் தங்களது தொழிலை செய்து கொள்ள வசதியாக தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
தனியாக பகுதியை ஒதுக்கினால் பல நன்மைகள் உண்டாகும். பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு வழி பிறக்கிறது. எய்ட்ஸ், எச்ஐவி போன்றவற்றை அடியோடு குறைக்கலாம். விஷமிகளின் சேஷ்டைகள் குறையும். உடல் ரீதியான, தொழில் ரீதியான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சமூகத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார் அவர்.
டெல்லியைப் பொறுத்தவரை கிராண்ட் பேஸன் சாலை, மும்பையில் காமத்திபுரா, கொல்கத்தாவில் சோனாகச்சி ஆகியவை சிவப்பு விளக்குப் பகுதிகளாகும். ஆனால் சென்னையில் அப்படி ஒரு பகுதி இதுவரை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 90,000 செக்ஸ் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரக் கணக்கு கூறுகிறது. சென்னையில் மட்டும் 14,000 பேர் இருக்கிறார்களாம். ஆனால் இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமான செக்ஸ் தொழிலாளர்கள் சென்னையில் இருக்கலாம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
shared via