புஸ்வானமான இந்தியாவின் பொருளாதார வல்லரசு கனவு - தமிழ் சசி
மன்மோகன் சிங், ப.சிதம்பரம், சி.ரங்கராஜன், மான்டெக் சிங் அலுவாலியா ஆகிய பொருளாதார மேதைகளை உள்ளடக்கிய தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவை கனவுக்குழு என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த கனவுக்குழுவின் வழிநடத்துதலில் தான் தற்பொழுது இந்தியாவின் பொருளாதார வல்லரசு கனவு புஸ்வானமாகி கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூபாய் சுமார் 20% சரிந்துள்ளது.
High Growth leads to High Inflation என்று பொருளாதாரத்தில் ஒரு தியரி உண்டு. அதைத் தான் இந்தியாவின் கனவுக் குழு செயல்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்த பொழுது பொருளாதாரமும் தானாக வளரும் என்ற நம்பிக்கையில் அதைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் இந்தக் கனவுக்குழு மேற்கொள்ளவில்லை. சாதாரண மக்களை பணவீக்கம் அழுத்தினாலும் இரட்டை இலக்க உள்நாட்டு உற்பத்தி உயர்வு (GDP) தான் இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் பொருளாதாரத்தில் உள்ள தியரிகளை இந்தியா போன்ற நாடுகளில் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. உள்கட்டமைப்பு சரியில்லாத இந்தியாவில் குறுகிய காலத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சி நடைபெறும் சாத்தியங்கள் இல்லை. இந்தியாவின் பொருளாதார கொள்கைகளால் பல எதிர்மறை விளைவுகளே ஏற்பட்டன. உதாரணமாக தளர்த்தப்பட்ட விதிகளால் வெளிநாட்டு பணம், கூடவே கறுப்பு பணமும் இந்தியாவிற்குள் ஏராளமாக நுழைந்து. ரியல் எஸ்டேட் சந்தை அசுர வேகத்தில் வளர்ந்தது. குறுகிய காலத்தில் அதிகரித்த ரியல் எஸ்டேட் விலையால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்தது. ரியல் எஸ்டேட் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் அதிகரித்த பணவீக்கமும் மக்களின் வாங்கும் திறனை வெகுவாக குறைத்தது.
அதிகரித்த பணபுழக்கம் காரணமாக உள்நாட்டு உற்பத்தி பெருகும் என்ற தியரியும் இந்தியாவில் நடைபெறவில்லை. காரணம் உள்கட்டமைப்பு தொடங்கி இந்தியாவிற்கேயுரிய பலப் பிரச்சனைகள் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கவே இல்லை. பணவீக்கம் தான் அதிகரித்து கொண்டே இருந்தது. சில ஆண்டுகள் உள்நாட்டு உற்பத்தி 9% தொட்டாலும் அதற்கு முக்கிய காரணம் உலகெங்கிலும் இருந்த சுலபமான பணப்புழக்கம் காரணமாக நடந்த பொருளாதார உயர்வு தானே தவிர இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. இந்தியாவின் பொருளாதாரம் வளரும் என்ற நோக்கில் உள்ளே நுழைந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம், அதன் காரணமாக அதிகரித்த பணபுழக்கம், அதன் காரணமாக மலிவாக இருந்த இறக்குமதி, ரூபாய் உயர்வு என எல்லாமும் தற்பொழுது காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மோசமான பொருளாதாரம் காரணமாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை விலக்கி கொண்டிருக்கின்றன.
குறைவான உற்பத்தி மிக அதிகமான பணவீக்கம் (Slow growth High Inflation) என இந்தியா திண்டாடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4% என்ற மிகவும் குறைந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தியாவை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இணையான பொருளாதார வல்லரசாக உயர்த்தி காட்டுவோம் என்று கூறிய மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ரங்கராஜன், மான்டெக் சிங் போன்ற பொருளாதார மேதைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை பத்தாண்டுகள் பின்நோக்கி கொண்டு சென்றிருக்கிறார்கள். நல்ல வளர்ச்சி.
1990களின் பிற்பகுதியில் தெற்காசிய நாடுகளான மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்றவை மிகப் பெரிய சரிவை எதிர்கொண்டன. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் இந்த நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. உலகப் பொருளாதாரத்தின் அடுத்த வல்லரசுகளாக இந்த நாடுகள் கருதப்பட்டன. உள்நாட்டு உற்பத்தி அதிகாரிக்காமல் வெறும் பணமுதலீடுகள் காரணமாக நடந்த இந்த பொருளாதார உயர்வு சரிவுக்கும் காரணமாக இருந்தது. இதில் மிகப் பெரிய சரிவை எதிர்கொண்ட நாடு தாய்லாந்து. ஒரு கட்டத்தில் சுமார் 9% பொருளாதார உயர்வை அடைந்த தாய்லாந்து மிக மோசமாக சரிந்தது. தாய்லாந்தின் நாணயமான பாட் மிக மோசமாக சரிந்தது.
இது போன்ற பல பொருளாதார சரிவுகள் உலகெங்கும் நடந்திருக்கிறது. கிட்டதட்ட தெற்காசியாவில் நடந்த சரிவை போன்ற ஒரு சரிவையே இந்தியா எதிர்கொண்டு வருவதாக தான் எனக்கு தோன்றுகிறது. உள்நாட்டு உற்பத்தியில் பெரிய வளர்ச்சி இல்லாமல் சுலபமாக இருந்த பணப்புழக்கம் மற்றும் வெளிநாட்டு நிதி முதலீடுகள் காரணமாக ஏற்பட்ட வளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் ரூபாய் வேகமாக சரிந்து வருகிறது. இந்தியாவில் இருந்த தங்களுடைய முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வேகமாக விலக்கி கொண்டு வருகின்றன. இது தொடருமானால் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்.
பணமுதலைகளும், அரசியல்வாதிகளும் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் சாமானிய மக்கள் ? அவர்களுக்கு அரசாங்கம் அளிக்கப் போகும் மலிவு விலை உணவுகளும், காய்கறிகளும், இன்ன பிற இலவசங்களும் மட்டும் தான் மிச்சம்.
via @தமிழ் சசி
No comments:
Post a Comment