திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம் today kanda sasti festival start in tiruchendur
திருச்செந்தூர், நவ. 3–
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
இன்று முதல் 5–ம் திருநாள் வரை மாலை 4.30 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
6–ம் திருநாளான 8–ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.
பின்னர் வேள்விசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சூரசம்ஹாரத்திற்கு பின் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.
7–ம் திருநாளான 9–ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணி அளவில் அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார்.
மாலை 5 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சியருளி, தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
...
shared via
No comments:
Post a Comment