உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம் பிளாட்டினம் கண்டுபிடிப்பு 4 thousand crore gold platinum invention at ground in UP
லக்னோ, அக். 28–
உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே பந்தெல்கன்ட் பகுதி உள்ளது. இப்பகுதியை 16–ம் நூற்றாண்டில் ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி செய்தனர். தற்போது இப்பகுதியில் ஜான்சி, பாண்டா, சித்ரகூட், தாடியா, திகம்ப்ரரி ரத், லலித்பூர், அலகாபாத், கஷஷாமபி, சாகர், தமோ, ஒரை, பின்னா, ஹமித்ரா, நர்சிங்பூர், மொகடா, பன்டா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.
தங்க புதையல் பந்தெல் கன்ட் பகுதியில் தொல் பொருள் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தாவுன்டியா ஹேடர் கிராமத்தில் பூமியை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தனர். அதில், அங்கு தங்க படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பந்தெல்கன்ட் பகுதியில் உள்ள ஜான்சி, ஜலாவுன், மசோபா, ஹமிபூர், பாண்டா, சித்ரகூட் மற்றும் லலித்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு தங்கம் தவிர பிளாட்டினம், சிலிகான் ஆஸ்பெஸ்டாஸ் பொட்டாஷ் உள்ளிட்ட தாது கனிமங்களும் புதைத்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியிலும் பூமியில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை மண்ணியல் மற்றும் சுரங்கங்களின் துறை இயக்குனர் பிங்கா உபாத்யாய் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் நிபுணர்களின் ஆய்வுப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.
அதை வைத்து பார்க்கும் போது பந்தெல்கன்ட், சோன்பாத்ரா பகுதிகளில் தங்கப்படிவங்கள் கொட்டிக்கிடப்பது உறுதியாகி விட்டது. அனேகமாக இங்குள்ள தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட தாது படிவங்களின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொல்பொருள் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின் லலித்பூரல் உள்ள கிடார்டோரி மற்றும் குந்த் காவான் பகுதிகளில் தங்க படிவங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் நீளத்துக்கு பரந்து வியாபித்து கிடக்கிறது.
தற்போதைய மதிப்பு படி இங்கு 140 கிலோ தங்கம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.43 கோடியாகும். லலித்பூரில் உள்ள பீர்வாரில் 87.5 கிலோ தங்கம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.26.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோன், பாத்ராவில் உள்ள ஹார்டி மற்றும் பாகிசோடி பகுதிகளில் கிடைத்த மண் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கும் 1200 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் தங்க படிவங்கள் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 25 கிலோ தங்கம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.7.5 கோடியாகும். அதே நேரத்தில் ஜான்சி மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் இங்கு மிகவும் பணம் கொழிக்கும் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு 4.5 கோடி டன் சிலிகா தாது உள்ளது. இதன் மதிப்பு ரூ.890 கோடி, இதை இப்பகுதியில் உள்ள இரும்பு, ஸ்டீல், செராமிக்ஸ் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். அதை தவிர ஜான்சியின் பதாகான் – மவுரானிபூர் பகுதியில் 1.3 கி.மீட்டர் நீளத்துக்கு ஆஸ்பெஸ்டாஸ் தாது உள்ளது. அதன் மதிப்பு ரூ.1200 கோடி, லலித்பூரியிலும் சிலிகா தாது படிவங்கள் உள்ளன. இங்கு 1.2 கோடி டன் சிலிகா படிவங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 237 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இகானா – டாங்கிலி பகுதியில் பிளாட்டினம் இனத்தை சேர்ந்த கனிமங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் தூரத்துக்கு விரிந்து கிடக்கிறது.
இது தமிழ்நாடு, கோவா, நாகாலாந்து மாநிலங்களில் இருப்பதை விட அதிகமாகும். சித்ரகூட் மாவட்டத்தில் செம்ரி மற்றும் ரேவா பகுதியில் உள்ள பாறைகளில் பொட்டாஷ் கனிமம் உள்ளது. மகோபாவில் 1 கோடி டன் சிலிகா உள்ளது. அதன் மதிப்பு ரூ.198 கோடி.
இந்தியாவை பொறுத்தவரை உத்தரபிரதேச மாநிலத்தில் தான் கனிமவளங்கள் மிக குறைவாக கிடைத்து வந்தன. அதுவும் இங்கு டோலமைட், சுண்ணாம்புக்கல், மேக்னசைட், பாஸ்போரைட் போன்ற சாதாரண கனிமங்கள் தான் கிடைத்தன.
தற்போது, இங்கு முதன் முறையாக தங்கம், பிளாட்டினம், சிலிகா, இஸ்பெஸ்டாஸ் போன்ற உயர்ரக கனிம வளங்கள் புதைந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக உத்தரபிரதேசம் திகழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
...
shared via
No comments:
Post a Comment