டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை: நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் director kalanchiyam defamation case arrest warrant to actress anjali
நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சென்னையில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி பாரதிதேவியும், சினிமா டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமை படுத்தியதாக அப்போது பரபரப்பு பேட்டி அளித்தார்.
ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்தார். தற்போது ஆந்திராவிலேயே தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலியை கொடுமை படுத்தவில்லை என்றும், தன்னை இழிவு படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார் என்றும் டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பல தடவை விசாரணைக்கு வந்தும் அஞ்சலி ஆஜராகவில்லை. கடந்த 12–ந் தேதி அஞ்சலிக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இன்று (29–ந்தேதி) ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று அஞ்சலி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது.
பத்திரிகை போட்டோ கிராபர்களும், டி.வி.கேமராமேன்களும் அங்கு திரண்டு நின்றனர். சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் அஞ்சலி வழக்கு விசாரணைக்கு வந்தது. டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் அஞ்சலி வரவில்லை. அஞ்சலி தரப்பில் வக்கீல் மேகநாதன் ஆஜராகி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அஞ்சலியால் வர இயலவில்லை என்றார்.
இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். களஞ்சியம் தரப்பில் வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் ஆஜரானார்கள். அஞ்சலியை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் பட உலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அஞ்சலி விரைவில் சரண் அடைந்து பிடிவாரண்டை ரத்து செய்ய கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
...
shared via
No comments:
Post a Comment