பாட்னா – டெல்லியில் பொதுக்கூட்டம்: நரேந்திரமோடி–ராகுல் இன்று பிரசாரம் Patna delhi meeting modi rahul propaganda
புதுடெல்லி, 27–
இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்காவிட்டாலும், ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார்.
நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கி தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். அவருக்கு போட்டியாக ராகுல்காந்தியும் பிரசார களத்தில் குதித்துள்ளார்.
பொதுக்கூட்டங்களில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்கள். நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசின் ஊழல்களையும், விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல், வெங்காயம் விலை உயர்வு போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி வருகிறார்.
இதற்கு ராகுல்காந்தியும் பதிலடி கொடுத்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், முசாபர் நகரில் பாரதீய ஜனதா தான் கலவரத்தை தூண்டியது என்றும், கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு கொண்டு நாசவேலைகளை அரங்கேற்றியதாக கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி பேச்சு குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் பாரதீய ஜனதா நாளை புகார் செய்ய உள்ளது. இந்தூர் கோர்ட்டில் ராகுல்காந்தி மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இன்று நரேந்திரமோடி பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், ராகுல்காந்தி டெல்லியில் நடைபெறும் கூட்டத்திலும் பேசுகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி முறிந்த நிலையில் அங்கு முதல் முறையாக இன்று பிரசார கூட்டத்தில் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
பாரதீய ஜனதாவின் எதிரியான முதல்–மந்திரி நிதிஷ்குமாருக்கு தனது பலத்தை காட்டுவதற்காக கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் கலந்து கொள்ள 14 சிறப்பு ரெயில்களும், 3 ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டன. அவர்கள் இன்று காலையே பாட்னா வந்து குவிந்துள்ளனர்.
இது பாரதீய ஜனதாவின் கவுரவ பிரச்சினை என்றும், பாட்னாவில் கூட்டம் நடை பெறும் காந்தி மைதானத்தில் 5 லட்சம் தொண்டர்கள் கூடுவார்கள் என்றும் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். பாட்னாவில் எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது.
கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், பீகார் மாநில வளர்ச்சிக்காக அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவார், ஏற்கனவே இதே கோரிக்கையை முதல்–மந்திரி நிதிஷ்குமாரும் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்னாவில் நரேந்திர மோடி பேசும் அதே வேளையில் டெல்லியில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.
டெல்லி மங்கோள்புரி பகுதியில் ராகுல்காந்தி பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நரேந்திரமோடிக்கு தொண்டர்கள் கூட்டம் வருவது போல் ராகுல்கூட்டத்திலும் தொண்டர்கள் கூட்டத்தை காட்ட காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
டெல்லி சட்ட சபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று முதல் முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதை கையில் எடுத்துக் கொண்டு பிரசாரம் செய்வதால் ராகுல் காந்தியும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
...
shared via
No comments:
Post a Comment