தினசரி செய்திகள்

Monday, October 21, 2013

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு public sector workers 20 percentage bonus Jayalalitha announced

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு public sector workers 20 percentage bonus Jayalalitha announced

சென்னை, அக்.22-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியபங்கு வகிப்பவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவது குறித்து நேற்று சென்னை கோட்டையில் எனது தலைமையில் ஓர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் இரா.வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்கு பிறகு, 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக்கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts