ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை தவிர்க்க முடியாது: மத்திய மந்திரி பனபாக லட்சுமி பேட்டி Andhra Pradesh separating the two can not be avoided Federal Minister Interview
குண்டூர், அக்.21-
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய மந்திரியும், பபட்லா தொகுதி எம்.பி.யுமான பனபாக லட்சுமி பபட்லாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக பிரிப்பது என்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பிராந்திய (சீமாந்திரா) மக்களின் நலன் பாதுகாக்கப்படும்" என்று உறுதி அளித்தார். சீமாந்திரா பிராந்தியத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக, தலைநகர் ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றும், அவர் வற்புறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், "தனிப்பட்ட முறையில் ஆந்திராவை பிரிப்பதை நான் விரும்பவில்லை. ஒன்றுபட்ட ஆந்திராவையே ஆதரிக்கிறேன். ஆனால், மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக" தெரிவித்தார்.
2014-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பபட்லா தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும், மந்திரி பனபாக லட்சுமி கூறினார்.
இதற்கிடையில் ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கடே வெங்கடா ரெட்டி கூறும்போது, "அரசியல் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக ஆந்திரா பிரிக்கப்பட்டால், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சீமாந்திரா பகுதி மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆந்திர மாநில முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பைலின் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டபின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், கட்சி மேலிடத்தின் மாநில பிரிவினை முடிவை வெளிப்படையாக விமர்சித்தார்.
"ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றுபட்ட மாநிலமாக ஆந்திரா நீடிப்பதற்கு மக்கள் போராட வேண்டும்" என்றும், முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், தெலுங்கானா பிராந்திய காங்கிரஸ் தலைவர்கள், கிரண்குமார் ரெட்டியை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் வாபஸ் பெறப்பட்ட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மறைமுகமாக ஆதரித்ததாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
...
shared via
No comments:
Post a Comment