ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: முஸ்லிம் தலைவர்கள் விமர்சனம் Muslim leaders say Rahul Gandhis statement most unfortunate
லக்னோ, அக். 25-
மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, முசாபர் நகர் கலவரத்திற்கு பா.ஜனதா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டதாகவும், அவர்களை ஆசை வார்த்தைகள் கூறி தீவிரவாத செயலில் ஈடுபட வைக்க முயன்றதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று முஸ்லிம் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஷியா பிரிவு மதகுருவான மவுலானா சாயிப் அப்பாஸ் நக்வி கூறுகையில், "இதுபோன்ற கருத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தைப்பற்றி தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், வகுப்புவாத சக்திகளுக்கு வலுவூட்டுவதாக அமைந்துவிடும். வகுப்புவாத கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்களின் வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.
ஷாகர் காஜி என்ற தலைவர் கூறுகையில், "முஸ்லிம்களுக்கு எதிராக இத்தகைய மலிவான புண்படுத்தும் வகையில் பேசுவதற்கு காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சி தலைவர்களுக்கு தகுதி இல்லை. நாங்கள் நாட்டுப்பற்றுடன் இருக்கிறோம். இந்தியாவுக்காக எதையும் செய்வோம். ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று வலியுறுத்தினார்.
"சிறுபான்மை சமுதாயத்தினரின் ஒருமைப்பாடு மற்றும் விசுவாசம் மீது அவதூறு பரப்புவோர் நாட்டிற்கு பெரும் கெடுதி விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய துணைத்தலைவர் மவுலானா சாதிக் தெரிவித்தார்.
...
shared via
No comments:
Post a Comment