பயலின் புயல் எதிரொலி: ஒடிசா, ஆந்திராவில் பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு death toll in odisha andhra floods rises to 64
புதுடெல்லி, அக். 26-
பயலின் புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பல கிராமங்களை சேர்ந்த 2 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். பலர் வீட்டின் கூரைகளின் மீது ஏறி நின்று மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர்களின் மூலம் ஒடிசாவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒடிசாவின் 17 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 1 1/4 கோடி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் வெள்ள நீரின் அரிப்பினால் வீடு இடிந்து விழுந்ததில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதனால் ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது. மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. 1.31 லட்சம் ஹெக்டேர் பருத்தி பயிர்கள் 1.07 லட்சம் ஹெக்டேர் நெல் பயிர்கள் என சுமார் 2 1/2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமடைந்தன.
ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டம், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, நல்கொண்டா, மஹபூப் நகர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்தன. 7 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 135 நிவாரண முகாம்களில் சுமார் 67 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுளளனர்.
ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஒங்கோல் மற்றும் ஏலுரு ஆகிய நகரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நேற்று மட்டும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி 5 பேர் பலியானார்கள். இதனால் அம்மாநிலத்தில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இதனால், ஒடிசா மற்றும் ஆந்திராவில் பயலின் புயல் எதிரொலியாக ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
...
shared via
No comments:
Post a Comment