தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் சென்னையில் கைது: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் காயம் two policemen injured in firefight near puthur
Tamil NewsToday,
புத்தூர், அக். 5–
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று திருப்பதி குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் தீவிரவாதிகள் புகுந்து இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் படை உஷார்படுத்தப்பட்டது. திருப்பதி குடை ஊர்வலத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மற்றொரு பிரிவினர் லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் போலீசார் சோதனையிட்டபோது தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் பதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான படை அவனை சுற்றி வளைத்து கைது செய்தது.
போலீசார் மடக்கிப் பிடித்ததும் பக்ருதீன் இன்ஸ்பெக்டரின் கழுத்தை நெரித்தும் கட்டிப்புரண்டு சண்டை போட்டும் தப்ப முயன்றான். உடனே இன்னொரு இன்ஸ்பெக்டர் அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பக்ருதீனை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று கூட்டாளிகள் எங்கே என்று விசாரித்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திரா மாநிலம் புத்தூரில் உள்ள ஒரு வீட்டை தமிழக – ஆந்திர போலீஸ் படை சுற்றி வளைத்தது.
தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் அங்கு குடும்பத்துடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போல் அங்கு 6 மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுடன் பெண்களும் இருந்தனர்.
போலீசார் முன் எச்சரிக்கையாக அந்த பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றினார்கள். அதன்பிறகு அதிகாலை 4 மணிக்கு தமிழக இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் துப்பாக்கியுடன் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர்.
போலீசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் அரிவாளால் வெட்டினார்கள். இதில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வெட்டுக்காயம் அடைந்தார்.
வீட்டுக்குள் சென்ற மற்றொரு போலீஸ்காரரை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர்.
தீவிரவாதிகள் வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கியுடன் அந்த வீட்டில் பதுங்கி இருக்கிறார்கள். போலீசார் வீட்டைச் சுற்றிலும் துப்பாக்கியால் சுட்டபடி இருந்தனர். பதிலுக்கு அவ்வப்போது தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டு வருகிறார்கள்.
இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. தொடர்ந்து அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.
2 தீவிரவாதிகளும் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் சிக்கிய தமிழக போலீஸ்காரரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.
ஆனால் அவரை பணய கைதியாக பிடித்துக் கொண்டு தீவிரவாதிகள் தப்ப முயற்சிக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
காலை 4 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 10 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் நீடித்தது. 10 மணிக்கு மேலும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தெரிவிக்கிறார்கள்.
நீண்ட நேர துப்பாக்கி சண்டைக்கு பின் தீவிரவாதி இஸ்மாயில் போலீசாரிடம் பிடிபட்டான். அவனிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு தீவிரவாதி பிலால் மாலிக்கை பிடிக்க போலீசார் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் – போலீஸ் துப்பாக்கி சண்டையால் புத்தூரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தீவிரவாதிகள் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு புத்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் 5 இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment