டெல்லியில் 30 ந்தேதி காங். பா.ஜனதாவுக்கு எதிராக 3 வது அணி கூட்டம்: ஜெயலலிதாவுக்கு இடதுசாரிகள் அழைப்பு Congress BJP against 3rd team Jayalalitha invite
டெல்லி, அக்.15-
விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது.
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கி விட்டார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரசும் இப்போதே பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டது.
காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே மோடி தலைமையில் பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நம்பிக்கையில் உள்ளது. இரண்டு கட்சிகளுமே தங்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்காக புதிய கட்சிகளை இழுக்கும் முயற்சியில் உள்ளன. இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தோல்வி அடைந்து விட்டது. பாரதீய ஜனதா மதசார்பற்ற கட்சி. எனவே காங்கிரஸ் பாரதீய ஜனதா இல்லாத 3-வது அணிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் 3-வது அணி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் வருகிற 30-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, சரத்யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த கட்சி பிரமுகர்கள் ஒருவர் கூறும்போது, காங்கிரஸ், பாரதீய கட்சிகளுக்கு எதிரான அணி அமைக்க வேண்டியது அவசியம். எனவே தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
அவர் கலந்து கொள்ள இயலாத நிலை இருந்தால், நிச்சயம் அ.தி.மு.க. சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி வைப்பார் என்று நம்புகிறோம். ஜெயலலிதாவுக்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களும், தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வற்புறுத்துவார்கள் என்றார்.
இதுதவிர பல்வேறு மாநில முக்கிய கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் வியூகம் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. 3-வது அணி அமைப்பின் அச்சாரமாகவும் இந்த கூட்டம் இருக்கும் என்று இடதுசாரி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
...
shared via
No comments:
Post a Comment