நய்யாண்டி விமர்சனம் Naiyaandi Review
by abtamil
நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு? அப்புறம் ஏன் இப்படி என தனுஷும், சற்குணமும் மாறிமாறி கேட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையை இந்த நய்யாண்டி படம் உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.
மரியாணில் மண்ணைக்கவ்வியிருந்தாலும் ஹிந்தியில் ராஞ்சானாவின் வெற்றியால் தனுஷ் தன் அடுத்த அடியை இன்னும் கவனமாய் எடுத்து வைப்பார்; தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளையும் பாலன்ஸ் செஞ்சு முன்னேறுவார் எனப் பார்த்தால்…
களவாணி படத்தை கலகலப்பாய் கொடுத்து ஆட்டத்தை துவங்கிய சற்குணம் அதற்குப்பின் ஜப்பானிய தாக்கம் இருந்தாலும் தரமாய் எடுத்து தேசிய விருதுகளை வாங்கி வாகை சூடிய பின் அடுத்து இன்னொரு தேசிய விருது நாயகனான தனுஷுடன் இணைய, அட சரியான டீமா அமைஞ்சிருக்கே…. ஒரு கலக்கு கலக்கிடுவாங்க போல என எதிர்பார்த்தால்..
மறுபடி முதல் வரியைப் படிக்கவும்.
ஒரு புறாவைப் பிடிக்க பெரிய கிணற்றைத் தாண்டி அறிமுகம் ஆகிறார் சின்ன வண்டு (தனுஷ்). அந்த கிணறு தாண்டும் படத்தை படமாக்கியிருக்கும் விதமே பல்லிளிக்கிறது. சரி ஆரம்பத்துல லைட்டா ஸ்லிப்பாகியிருக்கு… அடுத்து எந்திருச்சுடுவாங்க எனப் பார்த்தால் வில்லன் அறிமுகம். 'அந்தப் பொண்ணோ டாக்டர், நீங்க பத்தாங்க்ளாஸ் ஒத்துவருமா?' என ஒரே ஒரு கேள்விகேட்ட தன் ட்ரைவரை ஓடும் காரிலிருந்து தலையை வெளியே திணித்து போஸ்ட் கம்பத்தில் அடித்து இரத்தம் வழிய கொலை செய்து தான் வில்லன் என ப்ரூப் பண்ண.. என்னடா இது பத்து வருசத்துக்கு முன்னாடி வந்த படம் மாதிரி இருக்கே என நமக்கு வயிறு கலங்கி லேசாய் சந்தேகம் வர, சந்தேகம்லாம் வேண்டாம் பிரதர்.. கண்டிப்பா 15 வருசத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டிய படம் தான் இது என அடுத்த ஒரு மணி நேரத்துக்கு தனுஷ் நஸ்ரியாவை பார்த்து காதல் வயப்படும் காட்சிகளை அந்தக் காலத்து ராமராஜன், விஜயகாந்த் படங்களின் காதல் எபிசோட்களை விட சுமாராய் எடுத்து ப்ரூப் பண்ணுகிறார் இயக்குநர்.
அதன் பிறகு செகண்ட் ஆஃபில் டைட்டிலில் குறிப்பிட்ட மலையாளப் படமான 'மேலபரம்பில் யான் வீடு' படக் கதை துவங்குகிறது. அதாவது கல்யாணம் ஆகத 40, 38 வயதில் இரு அண்ணன்கள் (ஸ்ரீமன், சத்யன்) இருக்க தான் கல்யாணம் செய்துகொண்டால் அப்பா அம்மா கோவித்துக்கொள்வார்களே, அண்ணன்களுக்கு பெண் கிடைக்காதே என்ற பயத்தில் தான் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்ட வனரோஜாவை(நஸ்ரியா) தன் வீட்டிலேயை அனாதை என வேலைக்கு சேர்த்துவிட, ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்து அண்ணன்கள் இருவரும் மாறி மாறி ஜொள்ளு விட, கிடைத்த கேப்பில் வனரோஜா கர்ப்பமாக, இதற்கிடையே பர்ஸ்ட் ஆஃப் வில்லன் இங்கேயும் வர.. அப்புறம் எல்லாம் சுபமா இல்லையா என யாருமே ஊகிக்க முடியாத முடிவை நீங்கள் கட்டாயம் வெள்ளித்திரையில் தான் காண வேண்டும்.
இடையிடையே தமிழ் சினிமா கொஞ்ச காலமாய் மறந்திருந்த வில்லேஜ் கதைக்கு பாரின்ல பாடல் காட்சிகள் கண்றாவி வேற. சில சில காட்சிகளில் ஸ்ரீமன், சூரி சிரிப்பூட்டினாலும் பெரும்பாலும் கடியோ கடி.
ஊசிப்போன சாம்பாருல, வெங்காயம் ருசியா இருந்துச்சா இல்ல முருங்கைக்கா இளசா இருத்துச்சான்னு ஆராய்ச்சி பண்றது அனாவசியம் என்ற காரணத்தால் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இன்னபிற சமாச்சாரங்களையெல்லாம் பற்றி பேசி கடுப்பேற்றாமால் இத்துடன் இந்த விமர்சனத்தை முடித்துக்கொள்கிறோம்.
மேலும் அந்த தொப்புள் தெரிகிறதா இல்லையா என்ற அதி முக்கியமான கேள்விக்கு விடைதேடி தியேட்டருக்கெல்லாம் போய் காசை கரியாக்கிடாதீங்க பிரதர்.
தமிழ் சினிமா கடந்த சில வருடங்களில் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது இந்தப் படத்தைப் பார்த்த பின் தான் ஞாபகம் வருகிறது. அந்த வளர்ச்சியில் தானும் ஒரு கை குடுத்த சற்குணமே இப்போது சறுக்கி பின்னோக்கி போய் விட்டார் என்பது தான் வருத்தமான விசயம்.
இந்தப் படம் வந்த மாதிரியே காட்டிக்காம மறந்துட்டு அடுத்து ஒரு உருப்படியான படத்தை எடுக்கிற சிந்தனையில் சற்குணம் தன் திரைப்பயணத்தை தொடர வேண்டும், இனியாவது கதையே கேட்டு நடிக்கும் பழக்கத்தை தனுஷ் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
Show commentsOpen link
No comments:
Post a Comment